Time Using 01 ( நன்மை செய்யப்படியுங்கள் )
நன்மை செய்யப்படியுங்கள்
Read on to do good
யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.
ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளமிங் அவனை காப்பாற்றினார்.
ஃப்ளமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான். அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.
“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளமிங். அப்போது அவரது மகன் அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.
“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.
“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளமிங்.
“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் மகனுக்கு கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை உங்களுடைய மகனுக்கும் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார். இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.
விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளமிங் ஆனார்.
வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை? சர் வின்ஸ்டன் சர்ச்சில்! இந்த வின்ஸ்டன் சர்ச்சில் தான் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்து தேசத்தை ஆண்ட பிரதமர். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தேசம் வெற்றி பெற வின்ஸ்டன் சர்ச்சிலின் பங்கு முக்கியமானது ஆகும்.
ஃப்ளமிங் செய்த ஒரு நன்மையின் காரணமாக மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அலெக்சாண்டர் ஃப்ளமிங் என்ற ஒரு மருத்துவர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் என்ற ஒரு பெரிய தலைவன் ஆகிய இருவர் உருவாக காரணமாய் அமைந்தது. வேதமும் அதைத்தான் நமக்கு போதிக்கிறது. IIதெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். நம்மால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது ஆண்டவர் நமக்கு பூரணமான பலனை தருவார். நாம் செய்யும் உதவிக்கு கண்டிப்பாக ஆண்டவர் நமக்கு பதில் செய்வார். அது நமக்கு மாத்திரம் அல்லாமல் நம்முடைய சந்ததிகளுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.
ஏசாயா 1:17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
Jesus Christ....

கருத்துகள்
கருத்துரையிடுக