விசுவாசம்

மத்தேயு 21:22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமயிருக்கிறது. அந்த விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றும் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்றும் அநேக இடங்களில் வேதத்தில் காணலாம். வேதத்தில் அநேக பரிசுத்தவான்களின் விசுவாச வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக தரப்பட்டுள்ளது. அவைகளைக் குறித்து இன்று தியானிப்போம்.

1. இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம்

விசுவாசம் என்று கேட்டவுடனே ஞாபகம் வருவது ஆபிரகாம். அவன் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டான். ஆபிரகாமுக்கு பிள்ளை இல்லாதிருந்த போது கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களை போல பெருகப் பண்ணுவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். ஆதியாகமம் 15:5,6 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். *அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.* நடக்க சாத்தியமே இல்லாத ஒன்றை கர்த்தர் அவனுக்கு கூறுகிறார். ஆபிரகாமும் கண்ணை மூடிக்கொண்டு கர்த்தர் நடத்துவார் என்று விசுவாசிக்கிறான். அது தான் விசுவாசம். ஆம் அது காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது. ரோமர் 4:19-22 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

2. உயிர் பிழைக்க வைக்கும் விசுவாசம்

எலியாவின் நாட்களில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் நேரிட்டபோது கர்த்தர் எலியாவை சாறிபாத் என்ற ஊரில் ஒரு விதவையின் வீட்டிற்கு செல்லுமாறு கூறுகிறார். அவ்வாறே சென்ற எலியா தண்ணீரும் அப்பமும் அந்த விதவையிடம் கேட்கிறான். I இராஜாக்கள் 17:12,13 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். இந்த நிலைமையை யோசித்துப்பாருங்கள். தானும் தன்னுடைய மகனும் சாப்பிட ஒரு வேளை உணவு மட்டுமே இருக்கிறது. அப்போது ஒரு தேவ மனிதன் வந்து அந்த உணவையும் கேட்கிறான். அந்த விதவையின் நிலையில் நாம் இருந்திருந்தால் என்ன கூறியிருப்போம் என்று சிந்தித்துப்பாருங்கள். ஆனால் அந்த விதவை கர்த்தருடைய மனுஷனின் வார்த்தைக்கு செவிகொடுத்து அவரின் வார்த்தையை விசுவாசித்தாள். I இராஜாக்கள் 17:15,16 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. *அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லை ஆனால் அந்த விதவை கர்த்தரின் வார்த்தைக்கு செவிகொடுத்து அதை விசுவாசித்ததால் அந்த பஞ்சத்திலே உயிரோடு காக்கப்பட்டாள்.*

3. இரட்சிப்புக்கேதுவான விசுவாசம்

ரோமர் 10:9,10 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
இரட்சிக்கப்படுவதற்கான முதல் தேவையே விசுவாசம் தான். இயேசு தேவனுடைய குமாரன் எனவும் அவர் நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்து இன்றும் நமக்காக ஜீவித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் விசுவாசத்தோடு அறிக்கை செய்யும்போது இரட்சிக்கப்படுகிறோம். இன்று நம்முடைய வாழ்வை சிந்தித்துப்பார்ப்போம். இரட்சிக்கப்படாதிருந்தால் இன்றே இயேசுவை விசுவாசித்து அவர் தரும் பாவ மன்னிப்பை இலவசமாக பெற்றுக்கொள்வோம். அவரது இரத்தம் பாவங்களை கழுவி நம்மை விடுதலை செய்ய வல்லது. 

4. அற்புதங்களை செய்யும் விசுவாசம்

பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்கு செல்லும்போது அங்கு சப்பாணியான ஒருவன் இருந்து பிச்சை கேட்டுக்கொண்டு இருந்தான். அந்த சப்பாணி அவர்களிடம் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தான். பேதுரு அவன் கையை பிடித்து தூக்கி விட்டு அவனை சுகமாக்கினான். பேதுரு இயேசுவின் மேல் வைத்த விசுவாசத்தின் காரணமாகவே இந்த அற்புதம் நடந்தது என்று அடுத்த வசனங்களில் கூறுவதை காண முடியும். அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:16 அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப்பெலப்படுத்தினது; *அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.* இதையே தான் இயேசுவும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அற்புதங்களாக பட்டியலிடுகிறார். மாற்கு 16:17,18 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

5. சுகம் பெறச்செய்யும் விசுவாசம்

இயேசு நடந்து செல்லும்போது பன்னிரெண்டு வருடமாக பெரும்பாடுள்ள ஸ்திரீ ஒருவள் அவருடைய வஸ்திரத்தை தொட்டால் சுகம் கிடைக்கும் என்று நம்பி தொடுகிறாள். மத்தேயு 9:21,22 நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். *இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.* நாமும் நம்மில் உள்ள பெலவீனங்கள், நோய்களில் இருந்து சுகம் பெற இயேசுவை முழு மனதோடு விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கும்போது மட்டுமே நாம் தேவனுடைய மகிமையை காண முடியும். 

6. கடல் மேல் நடக்கச்செய்யும் விசுவாசம்

கடல் போன்ற பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து நிற்கும் வேளையில் அந்த சூழ்நிலையின் நடுவே நடந்து செல்ல ஆண்டவர் மேல் வைக்கும் விசுவாசமே நமக்கு உதவி புரியும். மத்தேயு 14:25-31 இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். நாமும் பேதுரு போல அவிசுவாசமாய் சந்தேகப்படுகிறோம். நம்முடைய அவிசுவாசத்தின் காரணமாகவே பிரச்சனைகள் என்னும் கடலில் அமிழ்ந்து போகிறோம். நம்முடைய விசுவாசம் ஒழிந்து போகாதபடி கர்த்தரிடம் வேண்டிக்கொள்வோம். கர்த்தரிடத்தில் விசுவாசமாய் இருக்கும்போது எவ்வித சூழ்நிலையும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

7. உலகத்தை ஜெயிக்கும் விசுவாசம்

I யோவான் 5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 

உலகத்தின் பாடுகளையும், சகல பாவங்களையும் ஜெயிப்பதற்கு நமக்கு தேவை விசுவாசமே. கர்த்தர்மேல் இருக்கும் விசுவாசம் பாவத்தை நம்மண்டை நெருங்க விடாது. உலகத்தை ஜெயிக்கும் விசுவாசத்தை பெற கர்த்தரிடம் வேண்டிக்கொள்வோம். 

-------------------------------------------------------------------------------------------

விசுவாசத்தைக் குறித்து தியானித்தோம். இன்று நம்முடைய விசுவாசத்தைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம். விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும், பிசாசு நம்மை சோதிக்க உத்தரவு கேட்டாலும் நம்முடைய விசுவாசம் ஒழிந்து போகாமல் இருக்க நமக்காய் வேண்டுதல் செய்பவரும் கர்த்தர் ஒருவரே. கர்த்தருடைய சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்த்து விசுவாசத்தில் பலப்படுவோம். உலகத்தை கலக்குகிறவர்களாய் மாறுவோம். ஆமென்

மத்தேயு 17:20 கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


தேவ செய்திகளை வாட்ஸாப்பில் பெற விரும்பினால் உங்கள் பெயரை 8903646455 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்