Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்


சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக இந்த மண்ணில் இறங்கிவந்து சிலுவைப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். பெரிய வெள்ளியாகிய இன்று இயேசு சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகளை குறித்து நாம் அனைவரும் பல செய்திகளை கேட்கிறோம். ஆனால் இயேசுவின் சிலுவையை சுற்றி பலவித குரல்களும் கேட்டது. பல மக்களும் பேசினதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இயேசுவின் சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள் என்ற தலைப்பில் இன்று தியானிக்க இருக்கிறோம். 

சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

1. பரியாசத்தின் குரல்

அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். (மத்தேயு 27:39,40)

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இயேசுவை தூஷித்தார்கள். அதேபோல வேதபாரகர், பரிசேயர் மற்றும் மூப்பர்களும் அவரை பரியாசம் பண்ணினார்கள் என்று பார்க்கிறோம். இயேசுவின் சிலுவை மரணம் அவர்களுக்கு ஒரு பரியாசமாய் தோன்றியது. வேதம் சொல்லுகிறது பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது. (நீதிமொழிகள் 19:29) என்று. பரியாசம் அல்லது கேலி கிண்டல் செய்வது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பானது. பரியாச உதடுகள் இன்று நமக்கு காணப்படும் என்றால் இன்றே நம்மை திருத்திக்கொள்வோம். 

2. நிந்தனையின் குரல்

அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். (மத்தேயு 27:44)

இரண்டாவது இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களும் அவரை நிந்தித்தார்கள் என்று பார்க்கிறோம். தவறு செய்து தண்டனை அனுபவித்தவர்கள் பாவமறியா இயேசுவை நிந்திக்கும் நிகழ்வு எவ்வளவு மோசமானது. பிறரை நிந்திக்கும் முன்பு நம்முடைய நிலையை நாம் ஆராய்ந்து பார்த்தால் நாம் யாரையும் நிந்திக்க மாட்டோம். 

3. மனம் திரும்புதலின் குரல்

இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். (லூக்கா 23:42)

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு கள்ளன் அவரை நிந்தித்த போது மற்ற கள்ளன் தான் ஒரு பாவி என்று உணர்ந்தவனாக இயேசுவிடம் மனம் திரும்புகிறான். தனக்கு கிடைத்த கடைசி நேரத்தில் இயேசுவிடம் இரட்சிப்பை பெற்றுக்கொண்ட அந்த கள்ளன் நித்திய ஜீவனை பெற்றான் என்று பார்க்கிறோம். கள்ளனின் மனம் திரும்புதலின் குரல் அவனுக்கு நித்திய ஜீவனை பெற்றுத் தந்தது. சிலுவைப்பாடுகளை தியானித்துக்கொண்டு இருக்கும் நாம் நம்முடைய குறைகள், குற்றங்களை உணர்ந்து மனம் திரும்புவோம்.

4. தவறான புரிதலின் குரல்

அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்கவருவானோ பார்ப்போம் என்றான். (மாற்கு 15:35,36)

சிலுவையில் அகோரப் பாடுகளை ஏற்றுக்கொண்ட இயேசு தாகமாய் இருக்கிறேன் என்று கூறியது அவரது ஆத்தும தாகத்தை குறிப்பிடுகிறது. ஆனால் அங்கு இருந்தவர்கள் இவன் எலியாவை கூப்பிடுகிறான் என்றும் தண்ணீர் தாகம் இருக்கிறது என்றும் தவறாக புரிந்து கொண்டனர். அவரது ஆத்தும தாகத்தை அறியாமல் அவருக்கு கடற்காளானை கொடுத்தார்கள். *நம்முடைய வேதனையை பிறர் தவறாக புரிவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.* நம் வேதனை கஷ்டங்கள் யாவும் நம்மை சுற்றி இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நம் வேதனைகள் அறிந்தவர் தேவன் ஒருவரே. நம்முடைய கஷ்டங்களை அறிந்த அவர் நம்முடைய வேதனைகளை எல்லாம் மாற்றி நம்மை விடுவிக்க வல்லவராக இருக்கிறார். 

5. அழுகையின் குரல்

இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். (லூக்கா 23:48)

இயேசுவின் சிலுவைப் பாடுகளை காண வந்திருந்த ஜனங்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு சென்றார்கள் என்று பார்க்கிறோம். ரோமர்களிடம் இருந்து நம்மை மீட்க வந்தவராக நாம் நினைத்த இயேசுவுக்கு இப்படி ஆகி விட்டதே என்று அவர்கள் அழுது இருக்கலாம். இயேசுவின் சிலுவைப் பாடுகள் இன்று நமக்கும் அழுகையை வர வைக்கலாம். ஆனால் அதற்காக நாம் அழாமல் இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மையான நோக்கத்தை அறிந்தவர்களாய் நம்முடைய பாவங்களுக்காக கதறி அழுது மனம் திரும்பவே வேதம் நமக்கு கற்றுத்தருகிறது. 

6. பங்கிடுதலின் குரல்

அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். (யோவான் 19:24)

இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு அவரது வஸ்திரங்களை எவ்வாறு பங்கிடுவது என்று போர்ச்சேவகர் பேசிக்கொண்டதை யோவான் சுவிசேஷம் கூறுகிறது. தன்னுடைய வஸ்திரங்களையும் இழந்தவராக சிலுவையில் இயேசு தொங்கினார். ஒட்டுமொத்த மனித குலமும் பாவத்தில் இருந்து விடுபட இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது மட்டுமல்லாமல் அவரது வஸ்திரமும் பங்கிடப்பட்டது. அவர் தன்னுடைய வஸ்திரத்தையும் இழந்தவராக நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் தொங்கினார். இத்தனை பாடுகளை இயேசு சகித்தது அவர் நம்மேல் அன்பு கூர்ந்ததால் மட்டுமே. நமக்காக தன்னுடைய வஸ்திரத்தையும் இழந்த சிலுவை நாதர் இயேசுவின் சிலுவையண்டை வந்து பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்வோம்.

7. சாட்சியின் குரல்

நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். (லூக்கா 23:47)

சிலுவையை சுற்றி நிந்தனை, பரியாசம், கேலி, கிண்டல் என்று பல்வேறு குரல்கள் கேட்டது. ஆனால் இயேசுவுக்கு சம்பவித்த யாவையும் கண்ட நூற்றுக்கு அதிபதி இவர் மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்தான். முடிவு பரியந்தமும் இயேசுவின் வாழ்க்கை ஒரு சாட்சியுள்ள வாழ்க்கையாக இருந்தது. இன்று நம்முடைய வாழ்க்கை சாட்சியுள்ளதாக இருக்கிறதா??? மற்றவர்கள் நம்மை குறித்து கூறும் சாட்சி என்ன என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சிலுவையில் இயேசு பேசிய ஏழு வார்த்தைகளை தியானிக்கும் நாம் இயேசுவின் சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்களையும் தியானிப்பது அவசியம். பரியாசத்தின், குரல்களையும், நிந்தனைகளின் குரலையும் கேட்ட இயேசு மனம்திரும்புதலின் சத்தம் கேட்டு அந்த கள்ளனுக்கு இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் கொடுத்தார். தவறான புரிதலின் குரல் மற்றும் அழுகையின் குரல்களை கேட்ட இயேசு நம்முடைய பாவங்களுக்காக அழுது மனம் திரும்பும்போது நம்மை மன்னிப்பார். நமக்காக தன்னுடைய வஸ்திரங்களை பங்கிடும் குரலை கேட்ட இயேசுவின் வாழ்க்கையை குறித்து நூற்றுக்கு அதிபதி சாட்சி கொடுத்தான். இயேசுவின் சாட்சியுள்ள வாழ்க்கை போல நம்முடைய வாழ்க்கையும் சாட்சியுள்ளதாக மாற நம்மை அர்ப்பணிப்போம். ஆமென்.

தேவ செய்திகளை வாட்ஸாப்பில் பெற விரும்பினால் உங்கள் பெயரை 8903646455 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

விசுவாசம்