Time Using 03 ( அடைக்கலான் குருவிகள் )
அடைக்கலான் குருவிகள் இன்றைய நாளில் அழிந்து கொண்டிருக்கும் இனமாக உள்ளது. மாறிப்போன வாழ்க்கை முறையின் காரணமாக குருவி இனங்களை பாதுகாக்க மனிதர்கள் தவறி விட்டனர். எங்கள் வீட்டின் முன்பகுதியில் இந்த குருவிகள் கூடு அமைத்து இருந்தன. சில வேளைகளில் அவை எங்கள் வீட்டிற்குள் புகுந்து பின்பு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும். அவைகளை எடுத்து கூட்டில் வைத்து அடைக்கலம் கொடுத்தோம். இந்த அடைக்கலான் குருவிகளைக் குறித்து வேதம் கூறும் காரியங்களை தியானிப்போம்.
1. மதிப்பில்லாத குருவிகள்
லூக்கா 12:6 இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை.
அடைக்கலான் குருவிகள் அந்த நாட்களில் மக்களால் ஒரு விலை மதிப்பில்லாத பறவையாக காணப்பட்டது. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்றார்கள். ஆனால் அவ்வாறு உலக மக்களால் மதிக்கப்படாத ஒரு குருவியை குறித்து தேவன் கூறும் காரியங்களை பாருங்கள். அவைகளில் ஒன்றும் மறக்கப்படுவதில்லை என்று. ஆம் நம் கர்த்தர் நம்மை மறந்து விடுகிற தேவன் அல்ல. உலகத்தாரின் பார்வையில் நாம் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் இருக்கலாம். ஆனால் நம்மைப் படைத்த கர்த்தரின் பார்வையில் நாம் விலையேறப்பெற்றவர்கள். மற்றவர்களின் பார்வையில் அற்பமாக எண்ணப்பட்ட தாவீதை அரசனாக உயர்த்திய தேவன் இன்று அற்பமாக எண்ணப்படும் நம்முடைய வாழ்வை மாற்ற வல்லவர்.
2. அறியாமையின் குருவிகள்
நீதிமொழிகள் 7:23 ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.
குருவிகள் வேடன் வைத்திருக்கும் கண்ணியை அறியாமல் அதில் எளிதில் சிக்கிக்கொள்ளும். அதிலும் சில ஞானமுள்ள குருவிகள் கண்ணியில் சிக்காமல் தப்பிப்பதுண்டு. பகுத்தறிவு இல்லாத அந்த குருவி இனங்கள் அவ்வாறு சிக்கிக்கொள்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ஆறறிவு உள்ள மனிதர்கள் இவ்வாறு பிசாசின் வலையில் விழுவது ஏற்றுக்கொள்ள கடினமானது. நமக்கு முன் விரித்திருக்கும் வலையை பரிசுத்த ஆவியின் துணை கொண்டு அடையாளம் கண்டு அதில் விழாதிருக்கவே வேதம் நமக்கு கற்றுத்தருகிறது.
3. தனித்து இருக்கும் குருவிகள்
சங்கீதம் 102:7 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
குருவிகள் தனித்து வாசம் பண்ணும் தன்மை கொண்டவை. அவ்வாறு தனித்து இருக்கும் குருவிகளுக்கும் கர்த்தர் வேண்டிய ஆகாரங்களை கொடுக்கிறார். இன்று நாமும் ஒருவேளை தனிமையின் பாதையில் பயணம் செய்யும் சூழ்நிலையில் காணப்படலாம். தனிமையில் இருக்கும் குருவிகளை காப்பாற்றும் தேவன் நம்முடைய தனிமையை மாற்ற வல்லவர்.
4. கூடுகளில் நிம்மதியற்ற குருவிகள்
சங்கீதம் 84:3 என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
குருவிகள் பெரும்பாலும் வீடுகளின் அருகில் உள்ள மரங்களில் தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்ளும். அந்த பகுதியில் உள்ள மக்கள் அடைக்கலம் கொடுத்து காப்பற்றினால் மட்டுமே அவைகள் ஜீவனம் பண்ண முடியும் இதன் காரணமாகவே இவை அடைக்கலான் குருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த கூடுகளிலும் பூனை போன்ற மிருகங்களாலும், பெரிய வகை பறவைகளாலும் உயிருக்கு ஆபத்துடன் ஒரு நிம்மதியற்ற வாழ்வை இந்த குருவிகள் மேற்கொள்ளுகின்றன. இன்று நம்முடைய வாழ்வின் கூடு எங்கே இருக்கிறது??? நமக்கு அடைக்கலம் தரும் இயேசுவிடம் நம்முடைய வாழ்க்கை இருக்கும் என்றால் எவ்வித எதிரியாலும் ஒன்றும் செய்ய முடியாது.
இயற்கை அழிந்து கொண்டிருக்கும் வேளையிலும் நம்மால் இயன்ற அளவு இந்த அடைக்கலான் குருவிகளை பாதுகாப்போம். இந்த அடைக்கலான் குருவிகளைப்போல தனிமையின் பாதையில், யாவராலும் அற்பமாக எண்ணப்பட்டு, நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து, பிசாசின் கண்ணியில் விழுந்து கிடக்கிறோமா??? நம்முடைய வாழ்வின் இருப்பிடம் கர்த்தருடைய சந்நிதியில் இருக்குமென்றால் அவர் நமக்கு அடைக்கலம் தந்து, தனிமையில் நம்மை தேற்றி, பாவத்தில் விழாமல் நம்மை காத்து, எதிரிகளிடமிருந்து நம்மை விடுவித்து அற்பமாக எண்ணப்பட்ட நம்மை உயர்த்துவார். அவரை நம் அடைக்கலமாக்கிக் கொள்வோம்.
மத்தேய 10:31 ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
Glory to Jesus Christ

கருத்துகள்
கருத்துரையிடுக