மீட்பரின் மகத்துவங்கள்



ஏசாயா 47:4 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது.


மீட்பர் என்றால் மீட்டு இரட்சிப்பவர் என்று பொருள்படும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்கும் மீட்பராக இந்த மண்ணில் இறங்கி வந்தார். நம்முடைய தேவனாகிய மீட்பருடைய மகத்துவங்களைக் குறித்து இந்த நாளில் தியானிப்போம். 


1. மீட்பர் வல்லமையுள்ளவர்

எரேமியா 50:34 அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.


முதலாவது நம்முடைய மீட்பர் வல்லமையுள்ளவர். நமக்கு எதிராய் எத்தனை விதமான போராட்டமான சூழ்நிலை வந்தாலும் நம்மை விடுவிக்க அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார். தலைக்கு மேலே பிரச்சனை சென்றாலும், கோலியாத் போன்ற பலசாலிகள் நமக்கு எதிராய் வந்தாலும் ஆண்டவர் பராக்கிரமமுள்ளவர் என்பதை நாம் மறந்துபோகக் கூடாது. தாவீதை விட கோலியாத் சரீரப்பிரகாரமாக பார்த்தால் பலமுள்ளவன் தான். ஆனால் தாவீதின் மீட்பர் வல்லமையுள்ளவராக இருந்ததால் கோலியாத்தை எளிதாக தாவீதால் வீழ்த்த முடிந்தது. இன்றும் அந்த வல்லமையுள்ள மீட்பராகிய நம்முடைய தேவனை நாம் நோக்கிப்பார்த்தால் அவர் நமக்கு எதிராய் வரும் எல்லாவித ஆயுதங்களையும் தகர்த்துப்போடுவார். எதிரியின் தாக்கமோ அல்லது நோயின் தாக்கமோ எதுவாக இருந்தாலும் வல்லமையுள்ள மீட்பர் நமக்கு விடுதலை செய்கிறவராக இருக்கிறார். 


2. மீட்பர் உயிரோடு இருப்பவர்

யோபு 19:25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.


இரண்டாவது நம்முடைய மீட்பர் உயிரோடு ஜீவித்துக்கொண்டு இருக்கிறார். இயேசு இந்த பூமியில் அவதரித்து சிலுவைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு மரித்தாலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அவர் மரணத்தில் இருந்து எழுந்ததால் நமக்கும் மரண பயத்தில் இருந்து விடுதலை அளித்து நித்திய ஜீவனை குறித்த நம்பிக்கையை அளித்து இருக்கிறார். இன்றும் மரண பயத்தோடு வாழ்க்கையை கழித்துக்கொண்டு இருக்கிறீர்களா?? மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்த இயேசு நமக்கு உயிர்த்தெழுதலின் நிச்சயத்தை தந்து இருக்கிறார். அவரை ஏற்றுக்கொண்டு வாழும் ஒவ்வொருவரும் மரணத்தை ஜெயித்து நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வார்கள் என்பதே சத்தியமாகும்.


3. மீட்பர் வழக்காடுபவர்

நீதிமொழிகள் 23:11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.


மூன்றாவதாக நம்முடைய மீட்பர் வழக்காடுபவராக இருக்கிறார். ஏதேனும் பிரச்சனை என்றால் வழக்கறிஞர் தான் நீதிமன்றம் சென்று வழக்காடுவார். வேதத்தில் பார்த்தால் திக்கற்ற பிள்ளைகளின் மீட்பர் வழக்காடுபவராக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. யாரும் துணையில்லாத சூழ்நிலையில் இருக்கும் நமக்காக அவர் வழக்காடுகிறார். நீதியுள்ள நியாயதிபதியாகிய இயேசு நமக்காக வழக்காடி நீதியை பெற்றுத்தருகிறார். உலகப்பிரகாரமான நபர்கள் பணம் இல்லாமல் நமக்காக வழக்காட மாட்டார்கள். ஆனால் ஆண்டவரோ நம்மிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்கவில்லை. விசுவாசமுள்ள ஜெபத்தையே அவர் எதிர்பார்க்கிறார். ஆகவே நமக்காக வழக்காடும் தேவனிடம் நம்மை அர்ப்பணிப்போம். அவர் நமக்கு ஜெயத்தை தந்தருளுவார்.


4. மீட்பர் துணை நிற்கிறார்.

ஏசாயா 41:14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.


நான்காவதாக நம்முடைய மீட்பர் நமக்கு துணை நிற்பவராக இருக்கிறார். யாருமில்லாத நேரத்தில் நாம் தவிக்கும் நேரத்தில் இயேசு நம் பக்கம் வந்து நமக்கு துணை செய்கிறார். யோசேப்பின் வாழ்க்கையில் சகோதரர்களால் கைவிடப்பட்டு அந்நிய தேசத்தில் விற்கப்பட்டாலும் மீட்பரின் கரம் யோசேப்போடு இருந்து அவனை உயர்த்தியது. ஆண்டவர் யோசேப்பின் காரியங்களில் எல்லாம் அவனுக்கு துணை நின்று வெற்றியை கொடுத்தார். இன்றும் நம்முடைய வாழ்க்கையிலும் அவர் நமக்கு துணை நின்று வெற்றியை தருபவராக இருக்கிறார். அவரை நம்பி ஜெயத்தை ஜெயத்தை பெற்றுக்கொள்வோம். 


5. மீட்பர் நடத்துகிறவர்.

ஏசாயா 48:17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.


கடைசியாக நம்முடைய மீட்டர் நம்மை நடத்துபவராக இருக்கிறார். பாதை தெரியாத குருடரை ஆண்டவர் பாதை காட்டி நடத்துகிறார். வேதம் சொல்லுகிறது *ஏசாயா 42:16 குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிப்பேன்* என்று. அடுத்த வேளை என்ன செய்யப்போகிறோம் என்று பாதை தெரியாத குருடராய் இருந்தாலும் அவர் நமக்கு பாதையை காட்டி அதில் நடத்துபவராக இருக்கிறார். பரலோகம் சேர்க்கும் வரை அவர் நம்மை கைவிடமாட்டார்.


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே மீட்பரின் மகத்துவங்களைக் குறித்து தியானித்தோம். நம்முடைய மீட்பர் வல்லமையுள்ளவராக மரணத்தை ஜெயித்து உயிரோடு எழும்பி நமக்கும் உயிர்த்தெழுதலின் நிச்சயத்தை தந்து இருக்கிறார். அவர் நமக்காக வழக்காடி, துணை செய்கிறவராக இருந்து நம்மை செவ்வையான பாதைகளில் நடத்துகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்