Time Using 09 ( சீலோவாம் )

சீலோவாம்

                               Siloam

சீலோவாம் என்ற குளத்தில் சென்று கண்களை கழுவி பார்வையடைந்த மனிதனின் சம்பவத்தை நாம் எல்லோரும் அறிவோம். இந்த சீலோவாம் குளத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுத்தரும் காரியங்களை இந்த நாளில் தியானிப்போம். 

1. அனுப்பப்பட்ட சீலோவாம்

யோவான் 9:7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.

    சீலோவாம் என்றால் அனுப்பப்பட்டவன் என்று பொருள்படும். அந்த அனுப்பப்பட்ட சீலோவாமில் சென்று கண்களை கழுவிய குருடன் சுகம் பெற்றான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை ஆண்டவர் இந்த உலகத்தில் அனுப்புவதாக கூறி உள்ளார். ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல ஆண்டவர் நம் எல்லாரையும் சுவிசேஷத்தை அறிவிக்க அனுப்பி உள்ளார் என்று வேதம் கூறுகிறது. லூக்கா 10:3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். இயேசு கிறிஸ்து தன்னை இந்த உலகத்திற்கு அனுப்பிய பிதாவின் சித்தத்தை முழுமையாக செய்து முடித்தது போல நாமும்  கர்த்தர் நம்மை எதற்காக அனுப்பினாரோ அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 

2. குணமாக்கும் சீலோவாம்

     இரண்டாவதாக சீலோவாம் ஒரு குணமாக்கும் இடமாக காணப்பட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்த குருடனின் கண்களில் சேறுண்டாக்கி பூசி சீலோவாம் குளத்தில் கண்களை கழுவும்படி கூறினார். அவ்வாறு செய்த குருடன் சுகம் பெற்றான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உமிழ்நீர் பட்டதால் மாத்திரமே அந்த குருடன் சுகம் பெற்றான். இன்றும் ஒருவேளை பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா??? அன்று அந்த குருடனை சுகமாக்கிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று உங்களையும் சுகமாக்குவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அந்த குருடன் சீலோவாம் குளத்தில் கழுவினான். இன்று நாமும் கர்த்தருக்குள் கீழ்ப்படிந்து அவர் வார்த்தைகளின்படி நடப்போம். நம்முடைய எல்லா பிணிகளையும் அவர் மாற்றி சுகப்படுத்துவார்.

3. கண்களை திறந்த சீலோவாம்

     மூன்றாவதாக சீலோவாம் குளத்தில் அவன் கண்களை கழுவியதும் அவன் கண்கள் திறக்கப்பட்டது என்று பார்க்கிறோம். இன்று அநேகர் உலகப்பிரகாரமாக குருடர்களாய் இராவிட்டாலும் ஆவிக்குரிய கண்கள் குருடாக்கப்பட்டு தங்கள் போகும் பாதை அறியாமல் சென்று கொண்டு இருக்கின்றனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் மனக்கண்களை திறந்தால் மட்டுமே தன்னுடைய நிலையை உணர முடியும். வேதத்தில் பார்த்தால் பிலேயாம் கர்த்தரின் வார்த்தைக்கு விரோதமாய் செல்லும்போது கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்துடன் பிலேயாமுக்கு எதிராக நின்றார். பிலேயாம் பெரிய தீர்க்கதரிசிதான் ஆனால் கர்த்தருடைய தூதன் நிற்பதை அறியாமல் அவன் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தது. கழுதையின் மூலம் கர்த்தர் பேசி வெளிப்படுத்தினார். எண்ணாகமம் 22:31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். 
நாம் கர்த்தரை விட்டு பின்வாங்கிப்போகும் போது நம்முடைய கண்கள் அடைக்கப்பட்டு இருக்கும். கர்த்தர் நமக்கு எதிராய் நிற்பதை அறியாமல் தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம். ஆனால், கிருபையுள்ள கர்த்தர் நம் கண்களை திறக்கும்போது மாத்திரமே நாம் பாவ உணர்வு அடைய முடியும். அதற்கு அடுத்த வசனங்களில் பார்த்தால் பிலேயாம் தன் தவறுகளை உணர்ந்து மனம்திரும்புவதை காணலாம். இன்றும் அநேகர் தங்கள் ஆவிக்குரிய கண்கள் குருடாக்கப்பட்டு இருப்பதால் பலவித உபதேச கோளாறுகளிலும், பலவித பாவங்களிலும் சிக்கி தான் அந்த அந்த பாவத்தில் இருப்பதையே அறியாமல் வாழ்ந்து வருகின்றனர். கர்த்தர் அவர்களது ஆவிக்குரிய கண்களை திறந்தால் மட்டுமே தன்னுடைய உண்மை நிலையை உணர முடியும். இன்று அவ்வாறு ஆவிக்குரிய கண்கள் குருடாக்கப்பட்டு வாழும் மனிதர்களின் கண்கள் திறக்கப்பட்டு அவர்கள் மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை கண்டு கொள்ள ஜெபிப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சீலோவாம் குறித்து இந்த நாளில் தியானித்தோம். அனுப்பப்பட்ட சீலோவாம் போல கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களாய் காணப்படுகிறோமா என்பதை யோசித்துப்பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் உமிழ்நீர் அந்த குருடனை சுகமாக்கியது போல இன்று நம்முடைய சரீர வியாதிகளையும் இயேசு கிறிஸ்து சுகமாக்க வல்லவர். இயேசுவுக்கு கீழ்ப்படிந்து அவரை தேடி பூரண சுகத்தை பெற்றுக்கொள்வோம். ஆவிக்குரிய கண்கள் குருடாக்கப்பட்டு இருந்தால் கர்த்தரிடம் வேண்டிக்கொள்ளுவோம். அவர் நம்முடைய உள்ளார்ந்த கண்களை திறந்து மோட்சத்தின் பாதையில் நம்மை நடத்துவார். ஆமென், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து !

Glory to Jesus Christ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்