Time Using 06 ( ஆவியில் எளிமை )
ஆவியில் எளிமை
மத்தேயு 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
இவ்வுலகில் அநேகர் பணம், பொருள் ஆகியவற்றை மிகுதியாக சம்பாதித்து மிகப்பெரிய ஐசுவரியவானாய் வாழ விரும்புகின்றனர். ஐசுவரியவானாய் வாழ்ந்தாலும், தரித்திரனாய் வாழ்ந்தாலும் ஆவியில் எளிமை இருந்தால் மட்டுமே பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். வேதத்தில் கூறப்பட்டுள்ள சில ஆவியில் எளிமையுள்ளவர்களை இந்த நாளில் தியானிப்போம்.
1. ஆவியில் எளிமையுள்ள ஆயக்காரன்
ஆயக்காரன், பரிசேயன் உவமையில் இருவருமே ஜெபம் செய்வதற்கு ஆலயம் செல்கின்றனர். பரிசேயனோ உபவாசிக்கிறவனாயும், தசம பாகம் செலுத்துகிறவனாயும் காணப்பட்டும் அவனிடம் ஆவிக்குரிய எளிமை இல்லாத காரணத்தால் மற்றவர்களை அற்பமாக எண்ணினான். ஆனால் ஆயக்காரன் ஆவியில் எளிமை கொண்டிருந்ததால் கர்த்தரை நோக்கி தன்னை தாழ்த்தி ஜெபித்தான். ஆவியில் எளிமையுள்ள ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டான் என்று பார்க்கிறோம். லூக்கா 18:14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். இன்று ஒருவேளை நாமும் சபை காரியங்கள், ஜெபிப்பது, வேதம் வாசிப்பது போன்ற காரியங்களை தவறாமல் செய்து வரலாம். ஆனால் ஆயக்காரனிடம் காணப்பட்ட ஆவிக்குரிய எளிமை நம்மிடத்தில் காணப்படவில்லை என்றால் பரலோக இராஜ்யத்தை இழந்து போவோம்.
2. ஆவியில் எளிமையுள்ள பவுல்
சவுலாக இருந்து தேவனுடைய சபையை துன்பப்படுத்தியவனை ஆண்டவர் அழைத்து பவுலாக மாற்றினார். இந்த பவுல் முன்னோர்களின் வேதப்பிரமாணங்களின்படி கற்று வளர்ந்தவன் அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். இவ்வாறாக அறிவாளியாக இருந்த பவுல் தன்னை அவ்வாறு பெருமையாக காட்டிக்கொண்டதே இல்லை. எவ்வளவு தான் கற்றுத்தேர்ந்து இருந்தாலும் தான் ஒரு குப்பை என அறிக்கை செய்வது பவுலின் ஆவிக்குரிய எளிமையை காட்டுகிறது. பிலிப்பியர் 3:7,8 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். தான் எல்லாவற்றையும் கற்றிருந்தும் கிறிஸ்துவிற்கு முன்பு தான் ஒன்று இல்லாதவன், தான் ஒரு குப்பை என அறிக்கை செய்த பவுல் ஆவிக்குரிய எளிமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று நம்முடைய நிலையை யோசித்துப்பார்ப்போம். பதவி, பட்டம் மற்றும் உலக மேன்மை ஆகிய எல்லாம் கிறிஸ்துவுக்கு முன்பாக நாம் குப்பை என்று ஆவிக்குரிய எளிமையோடு வாழ்ந்தால் ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
3. ஆவியில் எளிமையுள்ள ஆபிரகாம்
ஆபிரகாமை ஆண்டவர் அழைத்து அவனை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 13:2 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். ஆபிரகாமும், லோத்துவும் சேர்ந்து இருந்தபோது அவர்கள் ஒருமித்து குடியிருந்ததை பூமி தாங்கக்கூடாததாய் இருந்தது. செல்வச் சீமானாய் இருந்த ஆபிரகாம், மந்தை மேய்ப்பருக்குள் வாக்குவாதம் உண்டானபோது லோத்தை நோக்கி நீ எங்கு வேண்டுமோ அந்த பாதையை தெரிந்து கொள் என தாழ்மையுடன் கூறுகிறான். ஆபிரகாம் நினைத்து இருந்தால் பார்வைக்கு இன்பமான பாதையை தெரிந்தெடுத்து இருக்கலாம். ஆனால் ஆபிரகாம் கூறியதை பாருங்கள். ஆதியாகமம் 13:9 இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். இது ஆபிரகாமின் ஆவிக்குரிய எளிமையை காட்டுகிறது. ஆபிரகாமின் ஆவிக்குரிய எளிமை அவனின் ஒட்டுமொத்த சந்ததிக்கும் ஆசீர்வாதத்தை கொண்டு வந்தது.
4. ஆவியில் எளிமையுள்ள இயேசு கிறிஸ்து
ஆவியில் எளிமையாய் இருங்கள் என்று பிரசங்கித்த இயேசு தானும் அவ்வாறே நடந்து காட்டினார். இராப்போஜன பந்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீஷர்களின் கால்களை கழுவி, தாழ்மையை வெளிப்படுத்தினார். யோவான் 13:14,15 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். "இயேசு கிறிஸ்து
தேவனுடைய ஒரே பேரான குமாரனாய் இருந்தபோதிலும் அவர் ஆவியில் எளிமையுள்ளவராக இருந்தார்". சீஷர்களின் கால்களை கழுவி தாழ்மையை வெளிப்படுத்திய இயேசு சிலுவையில் அறையப்பட தன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுத்ததால் இன்று நாம் பாவத்திற்கு நீங்கலாகி இருக்கிறோம். பிலிப்பியர் 2:6-8 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். இயேசுவில் காணப்பட்ட அந்த எளிமை இன்று நம்மிடமும் காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே ஆவிக்குரிய எளிமையை குறித்து தியானித்தோம். நம்முடைய ஜெபங்களில் ஆவிக்குரிய எளிமை காணப்படுகிறதா??? ஆயக்காரன் போல நம்மை தாழ்த்தி ஜெபிக்கும்போது மட்டுமே நீதிமானாக்கப்படுவோம். பவுலைப்போல நம்முடைய படிப்பு, பதவியை ஆண்டவருக்காக நஷ்டமென்று எண்ணி வாழும் வாழ்வையே ஆண்டவர் விரும்புகிறார். ஆவியில் எளிமையாய் இருங்கள் என்று போதித்த இயேசு கிறிஸ்து அவ்வாறே வாழ்ந்து காட்டியதால் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவனோடு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். நாமும் ஆவிக்குரிய எளிமையுள்ளவர்களாய் வாழும்போது மட்டுமே பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும். அவ்வாறான பாக்கியத்தை ஆண்டவர் நமக்கு தந்தருளுவாராக.
Glory to Jesus Christ
கருத்துகள்
கருத்துரையிடுக