Time Using 08 ( இளைப்பாறுதல் தரும் தேவன் )
இளைப்பாறுதல் தரும் தேவன்
இளைப்பாறுதல் என்றால் ஆங்கிலத்தில் Rest அல்லது தமிழில் ஓய்வு என்று பொருள்படும். இளைப்பாறுதல் இல்லாமல் இன்று அநேகர் சமாதானமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இளைப்பாறுதல் தரவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகத்தில் வந்தார். இந்த இளைப்பாறுதல் குறித்து வேதம் நமக்கு கற்றுத்தரும் காரியங்களை இந்த நாளில் தியானிப்போம்.
1. இயேசுவிடம் நாம் வரும்போது இளைப்பாறுதல்
எரேமியா 6:16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்......
முதலாவது பார்த்தால் நாம் நல்ல வழி எது என்று பார்த்து அதில் நடந்தால் நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறார். நல்ல வழி என்றால் என்ன?????? இயேசு சொன்னார் நானே வழி என்று. யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். நல்ல வழியாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் நடக்கும்போது நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். வருத்தப்பட்டு அநேக பாடுகள் வழியாக வாழ்க்கை என்னும் படகை ஓட்ட முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறீர்களா??? மெய்யான வழியாகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் வரும்போது அவர் நமக்கு மெய்யான இளைப்பாறுதலை தருவார். மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். இன்றே நம்முடைய பாரங்கள், பாவங்கள், மற்றும் கஷ்டங்களை இயேசு கிறிஸ்துவின் சிலுவையண்டை இறக்கி வைத்து அவர் தரும் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளுவோம்.
2. அவருடைய சமூகம் நமக்கு முன்செல்லும்போது இளைப்பாறுதல்
யாத்திராகமம் 33:14 அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
இரண்டாவதாக கர்த்தரின் சமுகம் நமக்கு முன்செல்லும்போது நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். அநேக வாகனங்களில் இந்த வசனம் எழுதி இருப்பதை பார்த்திருப்போம். மெய்யாகவே கர்த்தர் நமக்கு முன் செல்லும்போது நமக்கு பாதுகாப்பு கிடைப்பது மட்டும் அல்லாமல் நமக்கு இளைப்பாறுதலும் கிடைக்கும். கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிப்பதிலும் வேதம் வாசிப்பதிலும் நாம் நேரத்தை செலவிடும்போது அவருடைய சமுகம் நமக்கு முன் சென்று நம்மை பாதுகாத்து நமக்கு இளைப்பாறுதலை அளிக்கும். அந்த இயேசு கிறிஸ்துவின் சமுகம் நமக்கு முன் செல்லுகிறதா???? அவரது சமுகத்தை தேடி அவர் தரும் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளுவோம்.
3. இயேசு கிறிஸ்துவிடம் கற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு இளைப்பாறுதல்
மத்தேயு 11:29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மூன்றாவதாக இயேசு கிறிஸ்துவிடம் நாம் கற்றுக்கொள்ளும் போது நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் கற்றுக்கொள்ளுவதற்கு ஒரு முன் மாதிரியை வைத்துப்போய் உள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் வாழ்ந்து நமக்கு வைத்துப்போன முன்மாதிரியை பின்பற்றி, அனுதினமும் நம்முடைய சிலுவை என்னும் நுகத்தை சுமந்து வரும்போது நம்முடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதை வேதம் நமக்கு கற்றுத்தருகிறது. ஆண்டவர் நமக்கு கற்றுத்தந்த வழியில் நடக்கிறோமா என்பதை சிந்தித்துப்பார்த்து மனம் திரும்ப அழைக்கப்படுகிறோம்.
4. இளைப்பாறுதலற்ற வாழ்க்கை
இறுதியாக யாருக்கு இளைப்பாறுதல் இருக்காது என்று பார்ப்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் இருந்து பொல்லாத ஆவிகள் இளைப்பாறுதல் இல்லாமல் காணப்படும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படியென்றால் பொல்லாத ஆவிகளால் பாதிக்கப்பட்ட மக்களும் இளைப்பாறுதலற்ற வாழ்க்கை வாழ்வர் என்பதை புரிந்து கொள்ளலாம். லூக்கா 11:24-26 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார். மேற்கூறிய உவமையில் பின்மாற்றத்தைக் குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விளக்குகிறார். பின்வாங்கிப்போனவனை இளைப்பாறுதலற்ற ஆவிகள் மீண்டும் பிடிப்பதால் அவனது வாழ்க்கையிலும் இளைப்பாறுதல் காணப்படாது. பின்மாற்றக்காரனின் வாழ்க்கை முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும். இன்று நாமும் பின்மாற்றத்தில் இருப்போமென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வருவோம். எந்த பாவியையும் தள்ளாத நேசர் நம்மை மீண்டும் ஏற்றுக்கொண்டு நமக்கு இளைப்பாறுதல் தர ஆயத்தமாக இருக்கிறார்.
வருத்தப்பட்டு பாரம் சுமந்து வாழ்ந்து வருகிறீர்களா??? மெய்யான வழியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காட்டும் வழியில் சென்று, அவர் நமக்கு காண்பித்த முன்மாதிரியை கற்றுக்கொண்டு, அவர் சமுகத்தை தேடும்போது அவர் நமக்கு இளைப்பாறுதல் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். பின்மாற்றம் அடைந்து, பிசாசினால் பிடிக்கப்பட்டு இளைப்பாறுதல் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலையில் இருந்தால், சிலுவை நாதர் இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது, அவர் நம்மை மன்னித்து, மீண்டும் ஏற்றுக்கொண்டு இளைப்பாறுதல் கொடுப்பார். இனி வரும் நாட்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழியாக பரிசுத்தமுள்ள பரலோக பிதா நமக்கு இளைப்பாறுதல் தந்து ஆசீர்வதிப்பாராக.
Glory to Jesus Christ
கருத்துகள்
கருத்துரையிடுக