Time Using 07 ( நன்மையை அருளும் தேவன் )

நன்மையை அருளும் தேவன்

      நன்மையை அருளும் தேவன்

நன்மைகள் அல்லது ஆசீர்வாதங்கள் நம்முடைய பிதாவிடம் இருந்தே இறங்கி வருகிறது. இயேசு கிறிஸ்து யார் யாருக்கெல்லாம் நன்மைகளை அளிக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம். 

1. தம்மை தேடுகிறவர்களுக்கு நன்மை அளிக்கிறார்

சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.

ஆண்டவராகிய தேவன் தம்மை தேடும் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மைகளை வழங்குகிறார். சங்கீதக்காரன் கூறியது போல காட்டிற்கு இராஜாவாகிய சிங்கத்தின் குட்டிகளே பட்டினியடையலாம். ஆனால் இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்துவை தேடுபவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. தானியேலின் வாழ்க்கையில் பார்த்தால் அவன் அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் ஆண்டவரை தேடினதின் நிமித்தம் சிங்கக்கெபியில் போடப்பட்டான். ஆனால், ஆண்டவர் அற்புதமாக தானியேலை சிங்கங்களின் வாய்க்கு தப்புவித்து எல்லாருக்கும் முன்பாக உயர்த்தினார். ஆண்டவரை நாம் முழு மனதோடு தேட வேண்டும். அவர் வார்த்தைகளை தியானிக்க வேண்டும். அவ்வாறு ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்து வாழும்போது நம்முடைய வாழ்க்கையில் எந்த நன்மையும் குறைவுபடாது

2. விசுவாசிக்கிறவர்களுக்கு நன்மையை அளிக்கிறார்

யாக்கோபு 1:6,7 ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

தேவனிடம் நன்மையை பெற விரும்பினால் இயேசு கிறிஸ்துவை நாம் முழு இருதயதோடும் விசுவாசிக்க வேண்டும். ஆபிரகாமுடைய வாழ்க்கையை பார்த்தால் நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்றாலும் அவன் தேவனை விசுவாசித்தான். ஆண்டவர் அவன் விசுவாசத்தை நீதியாக எண்ணி அவனுடைய சந்ததியை ஆசீர்வதித்தார். ஆபிரகாமிடம் காணப்பட்ட அந்த விசுவாசம் இன்று நம்மிடையே காணப்படுகிறதா???? நடப்பதற்கு சாத்தியமில்லாத காரியங்கள் தேவனால் கூடும் என்பதை விசுவாசிப்போம். ஆண்டவர் நமக்கு நன்மைகளை தந்தருளுவார்.

3. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மை அளிக்கிறார்

சங்கீதம் 84:11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

மூன்றாவதாக உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு ஆண்டவர் நன்மைகளை அளிக்கிறார். சோதனையின் மத்தியிலும் யோபு உத்தமமாய் தேவனை பின்பற்றியதால் அவனுடைய பின்னிலைமை முன்நிலைமையை விட அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டு இருந்தது. இன்று நம்முடைய வாழ்க்கையை யோசித்துப்பார்ப்போம். சூழ்நிலையை கண்டு பின்வாங்காமல் எந்த நிலையிலும் ஆண்டவருக்கு முன்பாக உத்தமமாய் நடக்கும்போது அவர் நம்முடைய வாழ்க்கையில் நன்மையான காரியங்களை நிறைவாக அருளிச்செய்வார். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஆண்டவர் யாருக்கெல்லாம் நன்மைகளை வழங்குகிறார் என்று பார்த்தோம். தேவனை தேடும் பிள்ளைகளுக்கு எந்த நன்மையும் குறைவுபடாமல் ஆண்டவர் பார்த்துக்கொள்ளுவார். ஆண்டவரை விசுவாசித்து, உத்தமமாய் நடக்கும்போது அவர் எல்லாவித நன்மைகளையும் ஆண்டவர் அருளிச்செய்வார். 

யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

Glory to Jesus Christ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்