Time Using 13 (தீமை துன்மார்க்கனை கொல்லும்)
தீமை துன்மார்க்கனை கொல்லும்
ஒரு குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியின் முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட குயவன் ஒருவன் இராஜாவிடம்போய், இராஜாவே நமது நாட்டில் பிரசித்தி பெற்ற சலவைத் தொழிலாளி இருக்கிறார் எனவே நமது யானைகள் ஏன் கறுப்பாக இருக்க வேண்டும்???? அவற்றை வெண்மையாக வெளுத்துத்தர அந்த சலவைத்தொழிலாளியிடம் கூறலாமே என்றான்.
இராஜாவும் அப்படியே கட்டளை கொடுத்தான். குயவனுக்கு ஒரே ஆனந்தம். சலவைத் தொழிலாளியின் தலை சீவப்படும் நாளை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தான். ஆனால் தந்திரமான சலவைத்தொழிலாளி இராஜாவைப் பார்த்து, இராஜாவே கறுப்பு யானைவை வெண்மையாகச் சலவை செய்வது மிகவும் எளிது. ஆனால் யானையை வைக்கும்படி ஒரு பெரிய உறுதியான மண்பானையை செய்துதரும்படி குயவனுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும் என்றான்.
கட்டளை பிறந்தது, இரவுபகலாய் மாபெரும் பானையை குயவன் செய்ய முயன்றான். ஆயினும் யானையின் கால்பட்டதும் நொறுங்கிப்போயின. தன் பொறாமையால் வெட்டிய குழியில் தானே விழுந்த குயவன் இராஜாவால் வெட்டுண்டு மரித்தான்.
பரிசுத்த வேதத்திலும் இதேபோல ஆமான், மொர்தெகாய் சம்பவத்தில் பார்க்கலாம். மொர்தெகாய் ஆமானை வணங்கி நமஸ்கரிக்காததால் மொர்தெகாய் உட்பட யூத ஜனங்கள் முழுவதையும் அழிக்க ஆமான் வகை தேடினான். கர்த்தர் இராஜாவின் கண்களில் எஸ்தருக்கு தயவு கிடைக்கப்பண்ணி யூத ஜனங்களை தப்புவித்தார். ஆமான் மொர்தெகாய்க்கு செய்த தூக்கு மரத்தில் ஆமானையே இராஜா தூக்கிப்போட்டான். பரிசுத்த வேதாகமத்தில் காண்போம் சங்கீதம் 9:15 ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. மற்றவர்களுக்கு குழி வெட்டினவர்கள் தாங்களே அதில் விழுவார்கள். எனவே யாவருக்கும் நன்மை செய்யவே பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்றுத்தருகிறது.
சங்கீதம் 34:21,22 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
தேவனுக்கு மகிமை
கருத்துகள்
கருத்துரையிடுக