Time Using 12 (ஒருமனம்)

ஒருமனம்
                           ONE MIND

ஒருமனம் என்பது ஒரே சிந்தை அல்லது ஒரே எண்ணம் என்று பொருள்படும். கிறிஸ்தவர்கள் ஒரு மனம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் என தேவன் விரும்புகிறார். எவற்றில் எல்லாம் நாம் ஒருமனப்பட்டு இருக்க வேண்டும் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.

1. ஜெபத்தில் ஒருமனம்

மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் ஒருமித்து ஜெபிக்கும் ஜெபங்களில் ஒருமனம் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறார். நம்முடைய குடும்ப ஜெபம் அல்லது எந்த ஜெபக்கூடுகையாயினும் அங்கு உள்ளவர்களுக்கு ஜெபிக்கிற காரியங்களில் ஒரே சிந்தை இருந்தால் அவர்கள் வேண்டிக்கொள்ளுவதை கர்த்தர் அருளிச்செய்வார். இன்று நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடையாமல் இருப்பதற்கு ஒருமனம் இல்லாமையும் காரணமாக இருக்கலாம். இன்று நம்மை திருத்தி ஒருமனப்பட்டு ஜெபிக்கும்போது கர்த்தர் நம்முடைய ஜெபங்களை கேட்டு பதில் தருவார். 

2. ஆராதிப்பதில் ஒருமனம்

செப்பனியா 3:9 அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

இரண்டாவதாக ஆலயத்தில் சென்று பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, பரிசுத்த ஆவியானவருக்கும் நாம் ஆராதிப்பதில் ஒருமனம் காணப்பட வேண்டும். இன்று ஆலயங்களில் இந்த ஒருமனம் இல்லாததின் விளைவாகவே அநேக பிரச்சனைகளும், சண்டைகளும் உண்டாகி, கர்த்தர் திருப்பெயர் தூஷிக்கப்படுகிறது. நீ பெரியவனா இல்லை, நான் பெரியவனா என்று சபைகளில் அரசியல் செய்து திருச்சபை தேர்தல் என்ற பெயரில் நடக்கும் காரியங்களில் ஒருமனதை எப்படி எதிர்பார்க்க முடியும். இவ்வாறு ஆலயங்களில் ஒருமனம் இல்லாமல் ஆராதிப்பதால் ஆலயங்கள் கர்த்தர்ரின்றி செத்த சபைகளாக காணப்படுகிறது. நம்முடைய சபைகளில் இந்த ஒருமனம் காணப்பட நாம் மனம்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுவோம். அவர் நம்மிடையே ஒருமனதின் ஆவியை தந்து நம்மை ஆசீர்வதிப்பாராக. 

3. குடும்ப வாழ்வில் ஒருமனம்

மூன்றாவதாக நம்முடைய குடும்பத்தில் ஒருமனம் காணப்பட வேண்டும். கணவன் மனைவி இடையே மற்றும் பெற்றோர் பிள்ளைகள் இடையே ஒருமனம் காணப்பட வேண்டும். வேதத்தில் பார்த்தால் "ஆக்கில்லா பிரிஸ்கில்லா தம்பதிகளின் ஒருமனம் அவர்களை ஊழியத்திலும் பயன்படுத்தியது." கணவன் மனைவி இடையே ஒருமனம் இல்லாமல் இருப்பதாலேயே பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆண்டவரை மையமாக வைத்து வாழும் குடும்பங்களில் ஒருமனம் காணப்பட்டு அவர்கள் தழைத்தோங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழும் குடும்பங்களில் ஒருமனம் காணப்படும். இன்று நம்முடைய குடும்பங்களிலும் ஒருமனம் காணப்பட தேவன் நமக்கு உதவி செய்வாராக.

4. பாவத்தில் ஒருமனம்

ஒருமனம் பாவம் செய்வதில் காணப்படக்கூடாது. "அனனியா சப்பீராள் சம்பவத்தில் பார்த்தால் அவர்கள் இருவரும் பாவம் செய்வதில் ஒருமனப்பட்டு இருந்ததால் மடிந்து போனார்கள்." அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். நம்முடைய ஒருமனம் பாவம் செய்வதில் காணப்படக்கூடாது. கர்த்தர் பாவத்தை வெறுக்கிறவர். ஆனால், பாவியை நேசிக்கிறவர். இன்று ஒருவேளை நாமும் ஒருமனப்பட்டு ஏதேனும் பாவம் செய்திருந்தால் கர்த்தரின் பாதத்தில் அறிக்கை செய்வோம். கர்த்தர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ஒருமனம் என்ற தலைப்பில் இன்று தியானித்தோம். நம்முடைய ஜெபங்களில் ஒருமனம் காணப்படும்போது மட்டுமே நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படும். ஆலயங்களில் நம்மிடையே உள்ள சண்டைகளை, பகைமைகளை அகற்றி ஒருமனப்பட்டு ஆராதிப்பதையே ஆண்டவர் விரும்புகிறார். குடும்ப வாழ்விலும் அனனியா சப்பீராள் போல பாவம் செய்வதற்கு ஒருமனப்படாமல் ஆக்கில்லா பிரிஸ்கில்லா போல ஒருமனதோடு கர்த்தருக்கு ஊழியம் செய்யும் குடும்பமாக மாறும்போது கர்த்தர் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

தேவனுக்கு மகிமை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்