Time Using 11 (அழிவுக்கு முன்னானது அகந்தை)
தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸ் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது.
பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) 1804-ல் டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெற்றது.
அந்நாளில், போப்பும், அவருடன் கார்டினல்களும், மேலே ஆல்டர் இருக்கும் இடத்தில் காத்திருக்க, நெப்போலியன் தன் மனைவி ஜோஸப்பினின் கைகளைப் பிடித்தபடி நடந்து மேலே ஏறினான்.
அனைவர் கண்களும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது போப்பின் முன் முழங்கால் படியிடுவான் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்க, மேலே ஏறிப் போன நெப்போலியன், போப்பின் கையிலிருந்த கிரீடத்தை பிடுங்கி, ஆல்டர் இருக்கும் இடத்திற்கு தன் முதுகை காட்டியவாறு, அந்தக் கிரீடத்தை தானே தன் தலையில் வைத்துக் கொண்டான். என்ன ஒரு ஆணவம்! மட்டுமல்ல, தன் மனைவியையும் மகாராணியாக, அவனே முடிசூட்டினான்.
அவனுடைய ராஜ்ஜியம், ஐரோப்பா கண்டம் முழுவதும், போர்ச்சுகல், ஆஸ்ட்ரியா, ஸ்வீடன், ரஷ்யா மற்றும் இங்கிலாந்தைத் தவிர எல்லாஇடமும் பரவியிருந்தது.
ஆனால் முடிசூட்டி 10 வருடங்களுக்குள்ளாக, நெப்பொலியன், வாட்டர் லூ (Waterloo) என்னும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் (Battle of Waterloo) 1815-ம் வருடத்தில், நெல்சன் என்பவரிடம் தோல்வியைத் தழுவினான்.
அப்போதுஅவன் சிறைபிடிக்கப்பட்டு, St. Helena என்னும், எரிமலை இருக்கும் தீவில் கைதியாக அடைக்கப்பட்டான். பாவம் என்ன ஒரு பரிதாபம்? 'உலகத்தின் மூலையிலுள்ள இந்த தீவின் சின்ன பாறையில் நான் உட்கார்ந்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?' என்று அங்கு புலம்பிக் கொண்டே, 1821 ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி, ஆறு வருடங்கள் அங்கு கூண்டிலடைக்கப்பட்ட கழுகைப் போல வாழந்து, புலம்பியபடியே தன் 52 ஆவது வயதில் உயிரைத் துறந்தான்.
உலகத்தையே ஜெயித்த மனிதனுக்கு ஏற்பட்ட நிலைமை! என்ன ஒரு பரிதாபமான முடிவு!
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தனக்குள் கொண்டிருந்த பெருமை, அகந்தை ஆகியவற்றால் மாபெரும் தலைவனான நெப்போலியன் விழுந்து போனான். வேதம் சொல்லுகிறது நீதிமொழிகள் 29:23 மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
இதே போல தான் நெபுகாத்நேச்சார் நான் காட்டின மகா பாபிலோன் அல்லவா என்று தான் இருதயத்தில் பெருமை கொண்டதின் நிமித்தம் கர்த்தர் அவனை தள்ளினார் என்றும் பார்க்கிறோம். நீதிமொழிகள் 18:12 அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
இன்றும் நம்மிடையே பெருமை காணப்படுமாயின் அவற்றை கர்த்தர் சமூகத்தில் அறிக்கை செய்து விட்டு விடுவோம். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறவராக காணப்படுகிறார். தாழ்மையுள்ளவர்களாய் நாம் வாழும்போது அவர் தமது கிருபையை பொழிந்தருளி நம்மை ஆசீர்வதித்தபார்.
நீதிமொழிகள் 16:18 அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
தேவனுக்கே மகிமை....
கருத்துகள்
கருத்துரையிடுக