இம்மானுவேல் - தேவன் நம்மோடு
இம்மானுவேல் - தேவன் நம்மோடு
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:23)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இம்மானுவேல் என்ற வேறொரு பெயரும் உண்டு. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். இம்மானுவேலாகிய அவர் நம்மோடு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.
1. சோதனைகளில் இம்மானுவேல்
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது. (ஏசாயா 43:2)
முதலாவது ஆண்டவர் நம்முடைய சோதனைகளில் எல்லாம் நம்மோடு இருந்து நம்மை விடுவிக்கிறார். மேற்கூறிய வசனத்தில் பார்த்தால் தண்ணீர்களை கடக்கும்போது நான் கூடவே இருப்பேன் என்று கூறுகிறார். தண்ணீர்கள் போன்ற சோதனைகள் நமது வாழ்க்கையில் வராமல் போவதில்லை. ஆனால் அந்த தண்ணீர்களின் நடுவிலும் கர்த்தருடைய கரம் நம்மை நடத்தும் என்பதை மறந்துபோக வேண்டாம். சோதனைகளில் தேவன் இம்மானுவேலராய் நம்மோடு இருந்து அவைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறார்.
2. குறைவுகளில் இம்மானுவேல்
இரண்டாவது நம்முடைய குறைவுகளில் ஆண்டவர் இம்மானுவேலராய் இருக்கிறார். கானா ஊரின் கல்யாண வீட்டில் குறைவு ஏற்பட்ட போது அங்கிருந்த இயேசு குறைவுகளை மாற்றி நிறைவாக்கினார். இந்த சம்பவத்தில் இரண்டு காரியங்ளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். முதலாவது குறைவு ஏற்பட்ட இடத்தில் இயேசு இருந்தார். இரண்டாவது அவர்கள் இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து தண்ணீரை நிரப்பினார்கள். "நம்முடைய வாழ்க்கையிலும் இம்மானுவேலாகிய இயேசு நம்முடைய உள்ளத்தில் பிறந்து அவருக்கு நாம் கீழ்ப்படிந்தால் மட்டுமே நம்முடைய குறைவுகள் நிறைவாகும்." இன்றும் ஆண்டவர் நம்முடைய குறைவுகளை மாற்றி நிறைவாக்குவேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
3. தனிமையில் இம்மானுவேல்
மூன்றாவது ஆண்டவர் நம்முடைய தனிமையில் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார். யோசேப்பின் வாழ்க்கையில் பார்த்தால் சொந்த சகோதரர்களால் விற்கப்பட்டு, போத்திபார் வீட்டில் பொய் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தனிமையாக இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார் (ஆதியாகமம் 39:21). சிறையில் தனிமையாய் இருந்த யோசேப்போடு இருந்த தேவன் இன்றும் நம்முடைய தனிமையிலும் நம்மோடு இருந்து நமக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார்.
இம்மானுவேல் என்ற தேவன் நம்மோடு இருக்கிறார். அவர் சோதனைகளில், குறைவுகளில், தனிமையில் நம்மோடு இருந்து நமக்கு உதவி செய்து நம்மை விடுவிக்கிறவராக இருக்கிறார். இம்மானுவேல் என்னும் தேவனை இன்றே நம் உள்ளத்தில் பெற்று அவர் தரும் ஆசீர்வாதங்களை நிறைவாய் பெற்றுக்கொள்ளுவோம்.
...இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:20)
தேவ செய்திகளை வாட்ஸாப்பில் பெற விரும்பினால் உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊர் பெயரை 8903646455 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக