Resurrection Sunday - உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து

உயிர்த்தெழுந்தார் இயேசு கிறிஸ்து.


லூக்கா 24:6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உயிர்ப்பு ஞாயிறு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிர்த்தெழுந்த இயேசு தரும் சமாதானம் நம் அனைவரையும் ஆட்கொள்வதாக. இந்த நாளிலும் இயேசு எதற்காக உயிர்த்தெழுந்தார் என்பதைக் குறித்து தியானிப்போம்.

1. நாம் நீதிமான்களாவதற்கு அவர் உயிர்த்தெழுந்தார்.

ரோமர் 4:25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் நடைபெற்று இருக்காவிட்டால் நாம் நம்முடைய பாவங்களிலே இருந்திருப்போம். அவர் நமக்காக உயிர்தெழுந்ததால் நம் பாவங்கள் கழுவப்பட்டு, இரட்சிப்பை பெற்று, நீதிமான்களாக்கப்படுகிறோம் என்பதை வேதம் நமக்கு கற்றுத்தருகிறது. I கொரிந்தியர் 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். இன்னும் பாவத்தோடு இருக்கிறீர்களா?? இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவு கூறும் நாளில் அவரிடம் திரும்பி வருவோம். உயிர்த்தெழுந்த இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்குவதற்கு வல்லமையுள்ளவராக இருக்கிறார். 

2. பரிசுத்த ஆவியை தருவதற்காக அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்றார்.

யோவான் 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் சென்று நமக்காக தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை அனுப்பினார் என்று பார்க்கிறோம். இயேசு உயிர்த்தெழாவிட்டால் பரிசுத்த ஆவி நமக்கு கிடைத்து இருக்காது. அன்று தனிமையில், பயத்தோடு இருந்த சீஷர்களிடம் உயிர்த்தெழுந்த இயேசு தரிசனமாகி அவர்கள் மீது ஊதி பரிசுத்த ஆவியை கொடுத்தார். அந்த உயிர்த்தெழுந்த இயேசுவை நாம் விசுவாசித்து ஏற்றுகொள்ளும்போது நமக்கு அவர் இரட்சிப்பை தந்து நம்மை பரிசுத்த ஆவியால் நிரப்ப வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

3. பிசாசை ஜெயிக்க உயிர்த்தெழுந்தார்.

எபிரெயர் 2:14 ....மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்.....

மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசை இயேசு தம்முடைய மரணத்தினாலே வென்று மகிமையாய் உயிர்த்தெழுந்தார் என்று பார்க்கிறோம். பிசாசின் பிடியில் பாதிக்கப்பட்டு இருக்கும் மனிதரை இயேசுவின் உயர்த்தெழுதலின் வல்லமை மீட்க வல்லமையுள்ளதாய் இருக்கிறது. இன்றே உயிர்த்தெழுந்த இயேசுவை நோக்கிப்பார்ப்போம். அவர் நம்மை எல்லாவித பிசாசின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்குவார்.

4. உயிர்த்தெழுதலின் நிச்சயத்தை நமக்கு தருவதற்கு அவர் உயிர்த்தெழுந்தார்.

I கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்கப்போவது நிச்சயம். ஆனால் மரணத்திற்கு பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இயேசுவின் இரண்டாம் வருகையில் மரித்தோரின் உயிர்த்தெழுதல் இருக்கும் என்பதற்கு முன்னடையாளமாக இயேசு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவுக்குள் மரித்த ஒவ்வொருவரும் ஒரு நாள் அவரது வருகையின்போது உயிர்த்தெழுவார்கள். அவ்வாறான நம்பிக்கையை இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு தருகிறது.

I தெசலோனிக்கேயர் 4:16,17 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.


கிறிஸ்துவில் பிரியமானவர்களே இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து தியானித்துக்கொண்டு இருக்கும் நாம் அவர் உயிர்தெழுந்ததால் தரப்பட்ட பாவ மன்னிப்பை பெற்று நீதிமான்களாக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு இருக்கிறோமா என்பதை சிந்தித்துப்பார்ப்போம். பிசாசை ஜெயித்த அவரது உயிர்த்தெழுதல் நமக்கு ஒரு நம்பிக்கையை தந்து இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரோடு உயிர்த்தெழ அடையாளமாக அமைந்தது. இன்று நாம் மரித்தால் அவர் வருகையில் உயிர்த்தெழுந்திருக்கிறவர்களாக இருப்போமா என்பதை சிந்தித்துப்பார்ப்போம். 

ரோமர் 5:10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.


தேவ செய்திகளை வாட்ஸாப்பில் பெற விரும்பினால் உங்கள் பெயரை 8903646455 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்