வழி காட்டும் தேவன்...

கிறிஸ்துமஸ் காலங்களில் இருக்கும் நாம் ஆண்டவரின் பிறப்பைக்குறித்து பல காரியங்களை கேட்டு வருகிறோம். ஆண்டவரின் பிறப்பை உலகிற்கு தெரியப்படுத்த ஆண்டவர் பலவற்றை உபயோகப்படுத்தினார். அவ்வாறு ஆண்டவரின் பிறப்பை வழிகாட்ட பயன்படுத்தப்பட்ட காரியங்களைக் குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம். 

1. நட்சத்திரத்தின் மூலம் வழிகாட்டிய தேவன்

மத்தேயு 2:1,2 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்.

இயேசு பிறப்பை சாஸ்திரிகள் கண்டுகொள்ள வழி காட்டியது அந்த கிழக்கில் தோன்றிய நட்சத்திரமே. அது சரியான பாதையில் அவர்கள் செல்லவும். கிறிஸ்துவை கண்டு கொள்ளவும் வழிவகை செய்தது. நட்சத்திரத்தை பின்பற்றி வந்தவர்கள் மேசியா ராஜ அரண்மனையில் பிறப்பார் என்ற நம்பிக்கையில் ஏரோதிடம் சென்று விசாரித்தார்கள். ஆனால் அங்கு நடந்ததே வேறு. நட்சத்திரத்தை மீண்டும் கண்ட அவர்கள் ஆனந்த சந்தோஷமடைந்து பிள்ளை இருக்கும் இடத்தை கண்டடைந்தார்கள். ஆண்டவர் இயேசுவின் பிறப்பை காண வழிகாட்டும் நட்சத்திரத்தை தேவன் சாஸ்திரிகளுக்கு ஏற்படுத்தினார். இதைப்போல இன்று நாமும் கிறிஸ்துவை அறியாத மக்கள் அவரை அறிந்து கொள்ள வழி காட்டும் நட்சத்திரமாக நாம் செயல்படவே ஆண்டவர் விரும்புகிறார். 

2. சொப்பனத்தின் மூலம் வழிகாட்டிய தேவன்

இரண்டாவது ஆண்டவர் சாஸ்திரிகளையும், யோசேப்பையும் சொப்பனத்தின் மூலம் வழிகாட்டினார். மத்தேயு 2:12, 13 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான். சொப்பனத்தின் மூலம் சாஸ்திரிகளுக்கும், யோசேப்புக்கும் வழிகாட்டி குழந்தை இயேசுவை ஏரோதின் கைக்கு தப்புவித்தார். அவர்களும் அந்த சொப்பனத்திற்கு கீழ்ப்படிந்தபடியால் வேறு வழியாய் சென்றனர். நமது ஆண்டவர் சொப்பனங்கள் மூலம் பேச வல்லவர். நம்முடைய வாழ்விலும் தேவன் சில நேரங்களில் சொப்பனத்தின் மூலம் பேசி வழிகாட்டுவார். எல்லா சொப்பனங்களும் ஆண்டவர் தருபவை அல்ல. ஆகவே ஆண்டவர் பேசும் சொப்பனம் எது என்று பரிசுத்த ஆவியின் ஏவுதலால் அறிந்து அதற்கு கீழ்ப்படியும்போது நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம்.

3. வார்த்தையின் மூலம் வழிகாட்டிய தேவன்

மூன்றாவது ஆண்டவர் தமது பிறப்பை பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்திய வார்த்தைகள் மூலம் வழிகாட்டினார். சாஸ்திரிகள் ஏரோதிடத்தில் விசாரித்த போது அவன் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து கேட்கிறான். மத்தேயு 2:5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். ஆண்டவர் தமது தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்த வார்த்தைகள் ஆண்டவரின் பிறப்பை சரியாக காட்டியது. வேத வார்த்தைகள் மூலம் தேவன் வழிகாட்டினாலும் அன்றைய வேதபாரகர்கள் இயேசுவை கண்டுகொள்ளவில்லை. இன்றும் ஆண்டவர் தமது வார்த்தையின் மூலம் நம்மோடு பேசி நமக்கு வழி காட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாமோ அவர் சத்தத்தை கேளாமல் செவியை அடைத்துக்கொண்டு உலகத்தின் போக்கிலே சென்று கொண்டு இருக்கிறோம். கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் நாம் வழிகாட்டும் ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுக்க நம்மை இன்றே அர்ப்பணிப்போம். 

4. தேவ தூதர்கள் மூலம் வழிகாட்டிய தேவன்

லூக்கா 2:10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

நான்காவதாக ஆண்டவர் தமது தூதர்களைக் கொண்டு மேய்ப்பர்களுக்கு வழிகாட்டினார். இரவில் தூங்காமல் மந்தையை காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் நற்செய்தி தேவதூதர்களால் அளிக்கப்பட்டது. தேவ தூதர்களால் வழிகாட்டப்பட்ட மேய்ப்பர்கள் இயேசு பிறந்த செய்தியை பிரசித்தம் பண்ணினார்கள்.

இயேசுவின் பிறப்பை அநேகர் அறிந்துகொள்ள ஆண்டவர் நட்சத்திரத்தை கொண்டும், தம்முடைய வார்த்தையை கொண்டும், சொப்பனங்கள் மூலமாகவும், தமது தூதர்கள் மூலமாகவும் வழிகாட்டினார். இன்றும் அதே தேவன் நமக்கு வழிகாட்ட ஆயத்தமாக இருக்கிறார். சொப்பனங்கள் மூலமாகவோ அல்லது தூதர்கள் மூலமாகவோ அல்லது வேத வார்த்தைகள் மூலமாகவோ பேசும் அவரது வார்த்தைக்கு செவி சாய்த்து அவரது பிறப்பை அநேகருக்கு அறிவிக்கும் நட்சத்திரங்களைப் போல மாறும்போது நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம்.

தேவ செய்திகளை வாட்ஸாப்பில் பெற விரும்பினால் உங்கள் பெயரை 8903646455 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்