Time Using 15 (விடுதலையின் வாழ்வு)
விடுதலையின் வாழ்வு
சங்கீதம் 146:7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டப்பட்ட சூழ்நிலையில் உள்ள மனிதர்களை விடுவிக்கிறவராக இருக்கிறார். எவைகளால் கட்டப்பட்டவர்களை கர்த்தர் விடுவிக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.
1. பாவத்தில் கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் இறங்கி வந்ததே நம்மை பாவத்தில் இருந்து விடுதலை செய்வதற்கே. காலாகாலமாய் பாவத்தில் அடிமைப்பட்டு, பாவத்தின் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்த மனிதர்களுக்கு ஒரு விடியலை அளிக்கவே இயேசு கிறிஸ்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிலுவையில் சிந்தினார். வேதம் சொல்லுகிறது ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள் என்று. சத்திய ஆவியாகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்து அவரிடம் நம்முடைய பாவங்களை உணர்ந்து அறிக்கை செய்யும் போது அவர் நமக்கு பாவத்தின் பிடியில் இருந்து ஒரு மெய்யான விடுதலையை தந்தருளுவார். யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். இயேசு கிறிஸ்து தரும் அந்த மெய்யான விடுதலையை பெற்று இருக்கிறோமா என்று நம்மை நாமே சோதித்து மனம்திரும்ப அழைக்கப்படுகிறோம்.
2. பிசாசினால் கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்
இரண்டாவதாக பிசாசினால் கட்டப்பட்டவர்களை இயேசு கிறிஸ்து விடுதலை செய்கிறார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். வேதத்தில் பல எடுத்துக்காட்டுகளை நாம் காணலாம். இயேசு கிறிஸ்து கதரேனருடைய நாட்டில் வந்தபோது பிசாசு பிடித்த ஒரு மனிதன் அவருக்கு எதிர்கொண்டு வந்தான். அவன் கல்லறைகளில் வாசம் பண்ணுகிறவனாய் காணப்பட்ட அவனுக்குள் இருந்த பிசாசுகளை இயேசு கிறிஸ்து துரத்தினார் என்று பார்க்கிறோம். லூக்கா 8:29 அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். அந்த ஆவிகளை இயேசு கிறிஸ்து பன்றிகளுக்குள் துரத்தினார். அப்பொழுது அந்த பன்றிகூட்டம் உயர்ந்த மேட்டில் இருந்து கடலில் பாய்ந்து மாண்டன என்று பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து அந்த மனிதனுக்குள் இருந்த பிசாசுகளை துரத்தினபின்பு அந்த மனிதனின் புத்தி தெளிந்தது. இன்றும் அநேகர் பிசாசின் பிடியில் கட்டப்பட்டவர்களாய் தங்களை தாங்களே காயப்படுத்தி, கல்லறைகளில் வாசம்பண்ணுவது போன்ற நாற்றம் பிடுத்த வாழ்வில் தங்கள் புத்தி மங்கினவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். இயேசு கிறிஸ்து பிசாசை வென்றவர். அந்த இயேசு கிறிஸ்துவிடம் நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொள்ளும்போது எல்லாவித பிசாசின் பிடியில் இருந்து அவர் விடுதலை செய்வார்.
3. வியாதியினால் கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்
மூன்றாவது ஆண்டவர் வியாதியினால் கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார். மத்தேயு 14:14 இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். இயேசு கிறிஸ்து மனிதனாய் வாழ்ந்த காலக்கட்டத்தில் அநேக வியாயஸ்தர்களை சொஸ்தமாக்கினார். அதே இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவனோடு இருக்கிறார். ஆகவே எந்த வியாதியையும் அவர் நீக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இன்று நீங்கள் எவ்வித நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது அவர் நமக்கு பரிபூரண சுகத்தை தந்தருளுவார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் விடுதலையின் வாழ்வைக் குறித்து தியானித்தோம். பாவத்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வருவோமென்றால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவோம். அவரது இரத்தம் பாவங்களை நமக்கு மன்னிப்பது மட்டுமல்லாமல் அவைகளில் இருந்து நம்மை விடுதலையும் செய்கிறது. பிசாசினால் அடிமைப்பட்டு, வியாதியினால் கட்டப்பட்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசு கிறிஸ்து மெய்யான விடுதலையை அருளிச்செய்வார்.
2 கொரிந்தியர் 3:17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
Glory To Jesus Christ
கருத்துகள்
கருத்துரையிடுக