Time Using 14 (நன்மையானவைகளை தரும் கர்த்தர்)

நன்மையானவைகளை தரும் கர்த்தர்
        "The Lord who gives good things"

சில பிள்ளைகள் துப்பாக்கி போன்ற பொம்மையில் தண்ணீரை நிரப்பி மற்றவர்கள் மேல் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் துப்பாக்கி போன்ற பொம்மை வேண்டும் என்று அழுதான். அவனுடைய தந்தை சாயங்காலம் வாங்கித் தருவதாக வாக்களித்து அவனுடைய அழுகையை நிறுத்தினார். ஆனால் அந்த பொம்மை ஒரு நல்ல விளையாட்டுப் பொருள் அல்ல. அது மற்றவர்களின் உடைகளை அழுக்காக்கும். தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதால் சளி பிடிக்கலாம். எனவே அதை வாங்காமல் அதைவிட விலை அதிகமானதும், தரமானதுமான ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கி வந்தார். அவனோ தான் கேட்டதை வாங்கித் தரவில்லையே என்ற கோபத்தில் அந்த நல்ல விளையாட்டுப் பொருளைத் தூக்கி வீசிவிட்டான்.

சில நேரங்களில் நாம் பிறர் அனுபவிப்பது போன்ற சில நன்மைகளை நாமும் பெற விரும்பி விசுவாசத்தோடு ஜெபிப்போம். ஆனால், நாம் கேட்ட காரியங்கள் கர்த்தரின் பார்வைக்கு நலமாக தோன்றாததால் அவர் அந்த காரியங்களை நமக்கு தருவதில்லை. அவைகளை கர்த்தர் நம்முடைய வாழ்வின் நன்மைக்காகவே தராமல் இருக்கிறார். ஆனால், நாமோ மற்றவர்களுக்கெல்லாம் கிடைத்த நன்மை நமக்கு ஏன் கிடைக்கவில்லை என மனங்கசந்து கொள்வோம். "நாம் விரும்புவதை எல்லாம் தேவன் தர வேண்டும் என்ற எண்ணத்தை நம்மை விட்டு அகற்றி தேவன் விரும்பும் காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் செயல்பட நம்மை ஒப்புக்கொடுக்கும்போது கர்த்தர் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்."

மற்றவர்களுக்கு கிடைத்தது போல என்னுடைய பிள்ளைக்கும் அதிக மதிப்பெண்கள், உயரிய படிப்புகள், மற்றும் வேலைவாய்ப்புகளை கர்த்தர் தரவில்லையே என்று பலர் அங்கலாய்ப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு நினைப்பது வேதத்தின் அடிப்படையில் தவறாகும். கர்த்தர் நமக்கு தந்த ஆசீர்வாதங்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவைகளை நன்றியோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் வளர வேண்டும். கர்த்தர் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய திட்டத்தை வைத்து இருக்கிறார். தற்காலத்தில் அவைகள் நமக்கு நன்மையாக தோன்றாவிட்டாலும் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. 

சங்கீதம் 85:12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

Glory to Jesus Christ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மீட்பரின் மகத்துவங்கள்

Good Friday - சிலுவையை சுற்றி கேட்ட ஏழு குரல்கள்

விசுவாசம்